நான் பைபிள் படித்தால் தவறா?
நான்கைந்து மாதங்களுக்கு முன்பு ‘பாகவதமும் பைபிளும்’ என்ற பதிவை எழுதினேன்.பிரவுசிங் செண்டரிலிருந்து எழுதியது.படங்களெல்லாம் இணைக்கவில்லை.இரண்டு நூல்களையும் படித்துவிட்டு தோன்றிய கதையை என் அண்ணன் மகனுக்கு கூறியது.கிட்ட்த்தட்ட சிறுவர் இலக்கியம்.
மேற்கண்ட எனது பதிவை படித்த ஒருவர் என்னை திட்டி கருத்துரை வழங்கியிருக்கிறார்.அதை வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.நான் பைபிள் படித்த்து தவறு என்பது அவரது கருத்து.அவரது கருத்துரை வெளியிட்ட பின்னால் ஆளாளுக்கு மோதி கமெண்ட் போட்டுக் கொண்டு இருந்தால் சங்கடம் என்பதால் தவிர்த்து விட்டேன்.
நான் புனித குரானும் படித்தேன்.பெரியாரையும்,மார்க்ஸ்,பிளேட்டொவையும் படித்தேன்.மதம் எப்போதும் சக மனிதனை நேசிக்க எனக்கு ஒரு தடையாக இருந்த்தில்லை.தவிர வாசிப்பு பழக்கம் என்பது வடைசுற்றித்தரும் பேப்பரைக்கூட படிக்கத் தூண்டுவதுண்டு.நல்லவை எங்கிருந்தாலும் அதை பின்பற்றுவது என்னுடைய பண்பு.மனிதர்களுக்கும்,புத்தகங்களுக்கும்,மதங்களுக்கும் இது பொருந்தும்.
அவரவர் குடும்பம் சார்ந்து வாழ்க்கை முறைகள் இருக்கின்றன்.மதிப்பீடுகள் இருக்கின்றன.விருப்பமான கடவுளை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.உலகில் உள்ள அனைவரும் என்னைப்போலவே இருக்கவேண்டும் என்பது அறியாமை.
நான் ஒரு இந்து என்பது மற்ற பண்பாட்டை பின்பற்றும் என் நணபர்களை எப்போதும் உறுத்தியதில்லை.அவர்களுடைய விழாக்களில் நானும்,என்னுடைய விழாக்களில் அவர்களும் பங்கு பெறுவது தொடர்ந்து கடைபிடித்து வரும் வழக்கம்.
இன்னொன்று தனிமனித தாக்குதலகள்.நான் பதிவு எழுதினால் அதில் கருத்துக்களுக்கு பதில் சொல்வதோ,விவாதிப்பதோ கருத்துரையில் இருந்தால் நல்லது.எனக்கு கமெண்ட் போடுபவரை விமர்சித்து மறுமொழி வருகிறது.அதை வெளியிட்டால் சண்டைகள் ஜோராக நடக்கலாம்.பதிவு கூட இன்னும் பிரபலமாகும்.ஆனால் நான் விரும்பவில்லை.
சில நாட்களில் இருபத்துநான்கு மணிநேரம் கழித்துதான் என்னுடைய வலைப்பக்கத்தை நானே பார்க்கிறேன்.என்ன எழுதிப்போவார்கள் என்று தெரியவில்லை.கமெண்ட் மாடரேஷன் வைத்திருப்பது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்ட்து.தேவையில்லாத சண்டைகளும்,தனிமனித தாக்குதல்களும் என் வலைப்பக்கத்தில் நடப்பதை நான் விரும்பவில்லை.


Comments
Post a Comment