புதிய பதிவர்களின் கவலைகள்
புதியதாக வலைப்பதிவு துவக்கி எழுத வந்துள்ள பல பதிவர்களும் ரொம்ப சங்கடப்படுகிறார்கள் போல தோன்றுகிறது.வாக்குகளும்,கருத்துரைகளும் தமக்கு கிடைக்கவில்லை என்பதும் பிரபலமாக முடியவில்லை என்பதும் அவர்களது முக்கிய கவலை.
தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகள் குப்பைகளை ஒதுக்கி,நல்லவற்றை வாசகர்களுக்கு தருமாறு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.ஆயிரக்கணக்கான பதிவுகள் உள்ள நிலையில் அதில் சாத்தியமிருப்பதாக தெரியவில்லை.அதிக வாக்குகள் பெற்று வெளியிடப்படும் பதிவுகளில் வேண்டுமானால் குப்பைகளை நிர்வாகம் தலையிட்டு ஒதுக்கலாம்.
ஓட்டு என்றாலே அரசியல் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.புதியதாக வருபவர்கள் இதற்காக மனம் தளர தேவையில்லை.இத்துடன் சுமார் எழுபது இடுகைகள் எழுதிவிட்டேன்.தமிழ்மணத்தில் இரண்டு ஓட்டுகளுக்கு மேல் ஒரு இடுகையும் பெறவில்லை.பெரும்பாலானவை பூஜ்யம்.
மற்ற திரட்டிகளிலும் அதிகமில்லை.நான் அதை ஒரு பொருட்டாக கருதாமல் எழுதி வந்திருக்கிறேன்.நான் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.நேரம் கிடைக்கும்போதுதான் எழுதுகிறேன்.சென்ற வாரம் நாள்தோறும் ஒரு இடுகை எழுத முடிந்த்து.ஏழு பதிவுகள்.கடந்த வாரம் தமிழ்மணம் பதிவுகளில் 15-வது இடம்.
கமெண்டுகள் என்று பார்த்தாலும் சராசரியாக எழுபது பதிவுகளுக்கு மூன்று கூட இல்லை.எப்போதாவது மற்றவர்களுக்கு கருத்துரை இட்டாலும் அவர்கள் பதிலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த்தில்லை.எனக்கும் அதிகம் இணையத்தில் இருக்க நேரம் இருப்பதில்லை.காலை ஏழரைக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும்.அலுவலகத்தில் எப்போதாவது கம்ப்யூட்டர் உதவியாளர் சாப்பிட போகும்போது யாருக்கும் தெரியாமல் படித்து கமெண்ட் போடுவேன்.
பிரபலமான பதிவர்களை பொருத்தவரை பலரும் சில ஆண்டுகளாக பதிவுலகில் இருப்பவர்கள்.படிப்பவர்கள் அவர்களது பெயரை பார்த்தவுடன் தெரிந்து படிப்பார்கள்.அவர்களுக்கு போட்டியாக உடனே பிரபலமாக நினைப்பது சரியானதல்ல!
புதியவர்களுக்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.பத்துபேர் படித்தாலும் உங்கள் கருத்துக்கள் தெளிவாக போய்ச்சேரவேண்டும் என்று நினைத்து எழுதுங்கள்.அதிகம் படித்து குறைவாக எழுதுங்கள்.நான் அதைத்தான் பின்பற்றுகிறேன்.தளராமல் முயற்சி செய்யுங்கள்.என்னுடைய வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment