வலைப்பதிவுகளும் வாசகர்களும்.

                                 வலைப்பதிவுகளை படிக்கும் வாசகர்கள் எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று சரியாக தெரியாது.இவர்களில் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கலாம்.கணினியும்,இண்டர்னெட் இணைப்பும் வைத்திருப்பவர்கள் அல்லது அலுவலகத்தில் இந்த வசதி இருப்பவர்கள்.வாசகர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பு.

                                 மாற்றங்கள் ஒன்றே மாறாத்து என்று சொல்லப்பட்டுவிட்ட்து.பிரபல பத்திரிகைகள் உள்பட வாசகர்களின் விருப்பமும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஆனால் எப்போதும் வாசகர்களின் தேர்வு சினிமாவும் அரசியலும்தான்.இப்போதும் பிரபல பத்திரிகைகளின் அட்டை இந்த இரண்டையும் தாங்கித்தான் வெளிவருகிறது.

                                 சினிமா அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவிட்ட ஒரு ஊடகம்.சினிமா பற்றிய செய்திகள் மீது எப்போதும் மோகம் இருக்கவே செய்கிறது.நம்முடைய ஆகச்சிறந்த பொழுதுபோக்கு அனைத்தும் சினிமா தொடர்பானவை.சினிமாவிலும் கூட நாலு ஃபைட்,கவர்ச்சி நடிகை ஒருவரின் நடனம் இருந்தால் போதும் என்று நினைத்த காலம் உண்டு.இப்போது நல்ல முயற்சிகள்,யதார்த்த திரைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

                                 எந்த தனிமனிதனும் அரசியல் சார்பற்று இருப்பது சாத்தியமல்ல.குடிமகனின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அரசியலே முக்கிய பங்கு வகிக்கிறது.சிலிண்டர் விலையேற்றம் முதல் மற்ற விலைகள்,வாழ்க்கைத்தரம்,வேலை வாய்ப்புகள் எல்லாம் அரசியல்வாதிகள் தீர்மானிக்கவேண்டியிருக்கிறது.அரசியல் தொடர்பான செய்திகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கவே செய்யும்.ஆனால் பெரும்பாலானவை வெற்று பரபரப்பாக ஆயுள் குறைந்த செய்திகளாகவும் இருக்கின்றன.இவை ஒரு கட்ட்த்தில் சலிப்பையும் ஏற்படுத்திவிடும்.

                                சினிமா,அரசியலுக்கு அடுத்து,பாலியல், தனிமனித தேவைகள்,விழிப்புணர்வுகள் குறித்த பகிர்வுகள் இருக்கின்றன.இவையும் சில நேரம் வரவேற்பு பெறுகிறது.இதுவரை பார்த்தவை செய்திகள்தான் என்பதை கவனியுங்கள்.இவைதவிர கதைகள்,கவிதைகள்,சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்பவை இருக்கின்றன.நகைச்சுவைக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்.

                                வலைப்பதிவிலோ,பத்திரிகையிலோ படைப்புகள் என்பதே எழுதும் தனிப்பட்ட ஒருவரின் திறமை சார்ந்த விஷயம்.பதிவரின் ஆற்றல் வெளிப்படுவது சிறுகதைகள்,கவிதைகள்,சிந்தனையை தூண்டும் ஆழமான கட்டுரைகளில்தான்.ஆனால் இதற்கு வரவேற்பு மிகவும் குறைவு.

                               வலைப்பதிவுகள்தான் என்றில்லை,பிரபல பத்திரிகைகளிலும் இதேநிலைதான்.விகடனில் தொடங்கி நான் வாரப்பத்திரிக்கை படிக்கத்துவங்கிய காலத்தில் –இருபதாண்டுகளூக்கு முன்பு-தொடர்கதைகள் கோலோச்சிக்கொண்டிருந்தன.சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்து மக்கள் நாவல் ஆனந்த விகடனில் தொடராக வந்த நாவல்தான்.சிறுகதைகளும் இரண்டு,மூன்றாவது இருக்கும்.இப்போது தொடர்கதைகள் போன இடம் தெரியவில்லை.

                               படைப்புகள் என்பவை பொறுமையாக கவனம் செலுத்தி படிக்கவேண்டிய ஒன்று.இன்றைய அவசர வாழ்க்கை இதற்கு இடம் தரவில்லை என்பதே உணமை.போகட்டும்.இவற்றால் மனிதனுக்கு நனமை இருக்கிறதா? இதையெல்லாம் எதற்காக படிக்கவேண்டும்?

                                  அண்டை மாநிலமான கேரளாவில் நாவல்,சிறுகதை,நல்ல கவிதைகளுக்கு,எழுத்தாளனுக்கு இருக்கும் வரவேற்பை கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே? அதற்கான காரணத்தை இன்னொரு பதிவில் அலச முயற்சி செய்கிறேன்.இன்னொன்றும் உங்களுக்கு தெரியும்.நம்மை விட கேரளம் சமூக மேம்பாட்டில்(கல்வியறிவு,பிறப்பு விகிதம்,இறப்பு விகிதம் இன்ன பிற.....) முன்னணியில் இருக்கிறது.இதற்கு தரமான கலை,இலக்கியம் தந்த மதிப்பீடுகள்தான் காரணம் என்று எனக்கு தோன்றுகிறது.

                                  தனி மனிதன் என்பவன் கிணற்றுத்தவளைதான்.அவனுடைய அனுபவங்களில் இருந்து மட்டுமே அனைத்தும் கற்றுக்கொள்ள முடியாது.பலருடைய விரிவான வாழ்க்கையை,அதையொட்டிய சிந்தனையை இலக்கியம்தான் வழங்கமுடியும்.தரமான படைப்புகள் சிறப்பான வாழ்க்கையை உறுதி செய்யக்கூடியவை.முன்பே சொன்னது போல அவசர வாழ்க்கை தடையாக இருந்தாலும் முயற்சி செய்தால் வாசகருக்கு மட்டுமில்லாமல் நாட்டுக்கும் நல்லதே!

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்