தெருக்கூத்து நினைவுகள்.
சுத்தம் சுகாதாரம் எல்லாம் யாருக்குத்தெரியும்? நான்குபுறமும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கிற இடமாக இருக்கும்.மண்ணில் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும்.டவுசர் கால நினைவுகள் அவை.தெருக்கூத்து நடப்பதாக சொல்லிவிட்டால் இரவு சாப்பாட்டில் கூட மனம் இருக்காது.அரிதாரம் பூச நான்குபுறமும் தென்னை ஓலை கட்டி விளக்குபோட்டால் போதும்.முதல் ஆளாக இடம்பிடித்துவிடுவோம்.கூத்து துவங்குவதற்கு முன்பாகவே தூங்கிப்போயிருப்போம். எங்கள் கிராமத்தில் நாடகம் என்று சொல்வார்கள்.கொஞ்சம் வளர்ந்து பெரியவகுப்பு படிக்கப்போனபிறகு பபூன் வருகைக்காக தூங்காமல் காத்திருப்போம்.தெருக்கூத்து என்பது மகாபாரதம்,இராமாயணத்தில் ஏதேனும் ஒருபகுதி.அத்தை,பாட்டி போன்றவர்களுக்கு இந்தக்கதையெல்லாம் அற்புதமாகத் தெரியும்.கூத்துக்கு முன்பாகவே கதை சொல்லி ஆர்வத்தைக்கிளறிவிடுவார்கள். கூத்துக்கு வாத்தியார் என்று உண்டு.அவர்தான் பயிற்சி கொடுத்து தயார் செய்வார்.ஒவ்வொரு கூத்துக்கென்று தனிதனியாக நோட்டுக்களை வைத்திருப்பார்.ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனியாக வேறு எழுதிக்கொடுப்பார்கள்.புதிய்தாக சேர்ந்தவர் மனப்பாடம் செய்து கொண்டிருப்பார்.ஏதாவது பகுதி மறந்துவிட்டால் வாத...