சோளம் –உணவும் ஊட்டச்சத்தும்
ஆனந்த விகடனில் ஆறாம்திணை படித்துக்கொண்டிருந்தேன்.சோளம் பற்றி படித்தவுடன் திடீரென்று நான் சிறுவனாகி விட்டேன்.சோளக்காட்டுக்கு பொம்மையை செய்து கொண்டிருக்கிறோம்.காய்ந்த புற்களை மனித உருவம் போல செய்து சட்டையையும்,முழுக்கால் சட்டையையும் அணிவிக்கிறோம்.காக்கை,குருவியெல்லாம் மனிதன் நிற்பதாக கருதி சோளம் தின்ன உள்ளே வராது.பறவைகளிலும் சில புத்திசாலிகள் இருக்கத்தானே செய்யும்? பொம்மை என்று தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்து விடும்.மண்,கல் போன்றவற்றை வாரி இறைத்து துரத்தவேண்டும்.இந்த வேலையைச்செய்தால் சோளம் காய்ச்சி தருவதாக அம்மாவோ அப்பாவோ சொல்வார்கள். பால் ஏறிய பின்பு பச்சை சோளத்தை காயவைத்து உதிர்ப்பார்கள்.வெல்லமும் ஏலக்காயும் சேர்த்து காய்ச்சுவார்கள்.எப்போது வெந்துமுடியும் என்று மனம் தவிக்கும்.இருப்பதிலே கம்பீரமாக உயரமாக நிற்பது சோளப்பயிர்தான்.ஐப்பசி மாத அடைமழைக்குப் பிறகு அதிகமான வளர்ச்சி இருக்கும்.அதிக எரு போட்ட வயலாக இருந்தால் பத்தடி உயரத்தைத் தொடும்.ஆட்கள் தனியாக உள்ளே போக அஞ...